நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை 2 வருடங்களுக்கு முன்பே தொடங்கிய அவர், 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாமல், விஜய் நடத்திய முதல் கட்சி மாநாடு பெரியளவு பேசப்பட்டது. காரணம், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, கூட்டணிக்கு வருவோர் வரலாம் என பேசியிருந்தார். இதனால் அவரது கட்சிக்கு பல கட்சிகள் கூட்டணி போட முனைப்பு காட்டும் என விஜய் எண்ணினார்.

ஆனால் எந்த கட்சியும் இதுவரை கூட்டணி அமையவில்லை, தேர்தலுக்கு இன்று ஓரிரு மாதங்களே உள்ள சூழலில் விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த கட்சியும் முன்வரவில்லை.
இதனிடையே தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியிருந்த தேர்தல் ஆணையம், புதுச்சேரியிலும் போட்டியிட விரும்பும் தவெகவுக்கு அங்கேயும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது.
புதுச்சேரியில், விஜய் கட்சி தன்னிச்சையாக போட்டி போட உள்ளது. ஆனால் தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதங்களே உள்ளதால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.
அப்படித்தான் தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி போட, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. புதுச்சேரியில், என் ஆர் காங்கிரஸ் பாஜகவுடன் கைக்கோர்த்து கடந்த தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளா நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரியல் என் ஆர் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற பேச்சுவார்த்தை நடத்த, ரங்கசாமியை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. காரணம் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதுதான்,. அதாவது, புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன், என் ஆர் காங்கிரஸ் போட்டியிடும். தமிழ்நாட்டில் தவெகவுடன் இணைந்து போட்டியுட உள்ளதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மல்குமார் சுரானா, பாஜக மேலிடத்தில் பேசிவிட்டு கூறுகிறேன் என சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளார். இதனால் தமிழக அரசியலில் புது அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி ரங்கசாமிக்கு திருவண்ணாமலையில் அதிக செல்வாக்கு உள்ளது. அதே போல கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களிலும் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னரே தமிழகத்தில் என்ஆர் காங்கிரஸ் கால் பதிக்க உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. இதனடிப்படையில் தவெகவுடன் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி என முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

