சேலத்தில் நடந்த தவெக கூட்டத்தில் இன்று சுர்ஜித் என்ற இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இறப்பை மற்ற அரசியல் கட்சிகள் வன்மையாக கண்டித்து வருகின்றன.
இது குறித்து அறிவுரை கூறியுள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற திரு. விஜய் அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கின்றன.
உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தையே உலுக்கிய கரூர் சம்பவத்திற்குப் பிறகும் கூட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது கண்டனத்திற்குரியது. முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் ஒரு நல்ல தலைமைக்கு அழகு என்பதை உணர்ந்து, பாதுகாப்புக் குறைபாடுகளால் உண்டாகும் இதுபோன்ற தொடர் அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்த வேண்டுமெனத் தம்பி திரு. விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

