நேற்று முத்துக்குமர் நினைவு தின கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் உரை நிகழ்த்தும் போது, ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலியே மயங்கி கிடந்தவர்கள், பார்ப்பனர்களின் வேள்வி யாகங்களில் மயங்கி கிடந்தவர்கள் என கூறினார்.
மேலும் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னராக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை, உடன்பாடும் இல்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில், திருமாவளவன் பேச்சுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவல், ஊழல் நிறைந்த, இந்து விரோத திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வுக்கும் தொடர்ந்து பாஜகவும் சங்கப் பரிவாரமும் காரணம் என குற்றம் சாட்டி வந்த I.N.D.I. கூட்டணி எம்.பி. திருமாவளவன், இப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பின்சென்று, தமிழ் மொழி இன்றைய தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளைத் தாண்டி உலகளவில் செழித்தோங்க காரணமாக இருந்த மகத்தான சோழ, பாண்டிய மன்னர்களை அவதூறாகப் பேசும் நிலைக்கு சென்றுள்ளார்.

இத்தகைய கருத்துகள் கடும் கண்டனத்துக்குரியவை. இது சோழர் மற்றும் பாண்டியர் வம்சத்தின் பாரம்பரியத்தையும் பெருமையையும் அவமதிக்கும் செயலாகும். மேலும், திருமாவளவனின் இந்தப் பேச்சு, அவரது ஆழமான வரலாற்று அறியாமையையே வெளிப்படுத்துகிறது.
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய பெயர்கள் தமிழ் பெயர்களா என அவர் கேள்வி எழுப்ப விரும்பினால், அதேபோல் கோபாலபுரம் குடும்பத்தைச் சேர்ந்த கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி, கலாநிதி உள்ளிட்ட பெயர்கள் தமிழ் பெயர்களா என்பதையும் கேட்கலாம்.
தமிழ் மொழியின் உண்மையான வளர்ச்சிக்கும், அதன் உலகளாவிய மதிப்புக்கும் மிகக் குறைந்த பங்களிப்பு செய்த அரசியல் கூட்டமாக இருப்பது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே ஆகும்.
1949 ஆம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டபோது தான் தமிழ்நாட்டின் வரலாறு ஆரம்பமானது அல்ல என்பதை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, மாநிலத்தின் பல பிரச்சினைகள் அந்த காலகட்டத்திலிருந்தே தொடங்கின என்ற உண்மையையும் அவர்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

