ரத்தினபுரியில் ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது கத்தி, பைக் பறிமுதல் ரத்தினபுரி பகுதியில் ஜவுளி வியாபாரியை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவானந்தா காலனி, டாடாபாத் முதல் தெருவைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று, 100 அடி ரோடு, ராஜு நாயுடு தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

“இந்த ஏரியா ரவுடி நான், எனக்கு பல வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் மாமுல் தர வேண்டும்” என கூறி மிரட்டி, லோகேஸ்வரனின் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ரூ.2,000 பணத்தை பறித்துள்ளார். இதனால் லோகேஸ்வரன் சத்தமிட்டதும், பொதுமக்கள் திரண்டனர். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்றார்.
இதுகுறித்து லோகேஸ்வரன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ரத்தினபுரியைச் சேர்ந்த லாரன்ஸ் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.1,000, கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
