2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து, திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், “தமிழகம் தலைநிமிர… தமிழனின் பயணம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப் பயணத்தின் நிறைவு விழா, புதுக்கோட்டை பள்ளத்திவயல் பகுதியில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால், எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா,
அதிமுக – பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி என்றும்,
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி இணைந்து போட்டியிட்டிருந்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் எனக் கூறினார்.வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டு, ஊழல் மற்றும் குடும்ப அரசியல் நிறைந்த திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழை பேச்சில் அல்ல, செயலில் மதித்து வருவதாக கூறிய அமித்ஷா
13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு,
நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்,
தமிழில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள்,
ரயில் நிலையங்களில் தமிழ் பெயர்ப் பலகைகள்
ஆகியவை பிரதமர் மோடியின் முயற்சியால் சாத்தியமானவை என குறிப்பிட்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என்றும்,
ஊழல் அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகம் வளர்ச்சி காண முடியாது எனவும்,
தமிழக அரசு முழுவதும் கடனில் இயங்குகிறது எனவும் அமித்ஷா கடுமையாக விமர்சித்தார்.

முன்னதாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்பட்ட ஆதரவு அலை,
தமிழகத்திலும் வீசும் என்றும்,
திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் எழுச்சி,
திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதிலும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

