வங்கிக் கணக்கு சேவைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்குநரை மாற்றும் வசதியைப் போன்றே, இனி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் வசதி அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முன்மொழிவு, ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட Payments Vision 2028 ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, “Payments Switching Service (PaSS)” எனப்படும் மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தளத்தை உருவாக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் போது, அவர்களுடன் தொடர்புடைய அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தானாகவே புதிய வங்கிக்கு மாற்றப்படும். குறிப்பாக, EMI கட்டணங்கள், SIP முதலீடுகள், கடன் தொடர்பான பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை எந்த தடங்கலும் இல்லாமல் தொடரும் வகையில் ஒருங்கிணைக்கப்படும்.
தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!
மேலும், புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை ஒவ்வொரு சேவையிலும் தனித்தனியாக புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் என்பது முக்கிய அம்சமாகும்.

ஆனால், இந்த மாற்றத்தில் கணக்கு எண் மாற்றமின்றி தொடர்ந்தாலும், புதிய வங்கியின் IFSC குறியீடு மட்டும் மாறும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், வங்கி சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு அதிக சுலபத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும் முக்கிய முன்னேற்றமாக இருக்கும் என நிதி வட்டாரங்கள் கருதுகின்றன.

