கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில், வெள்ளலூர் குப்பை கிடங்கிலிருந்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று இன்று விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்கள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க ரசாயனங்கள் தெளிக்கப்பட்டிருந்தாலும், லாரி கவிழ்ந்து குப்பைகள் அனைத்தும் சாலையில் கொட்டியதால் அப்பகுதி முழுவதும் தற்போது கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

