தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும், குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் விசாரணை நிலை குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் ஆ.குமாரபுரத்தைச் சேர்ந்த வக்கீல் மாரீஸ்வரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணையின் போது அரசு தரப்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டன. மாணவி கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், குற்றவாளியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவியின் குடும்பத்தினர் உறுதியுடன் கூறி, கடந்த ஒரு வாரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், செல்போன் சிக்னல் தகவல்களை ஆய்வு செய்து முக்கிய முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். அதன் அடிப்படையில் சாயல்குடியைச் சேர்ந்த 30 வயதான முனீஸ்வரன் என்பவனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முனீஸ்வரன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொலை எவ்வாறு நடைபெற்றது? பின்னணி என்ன? போன்ற முக்கிய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட போலீசார் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

