கோவை, காருண்யா பல்கலைக் கழக விடுதியில் தங்கி இருக்கும் மாணவர் ஒருவர், அங்கு இருந்த ஒரு பூனையை விடுதி மாடியில் இருந்து கீழே தூக்கி எறியும் கொடூரமான காட்சி வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில், மாணவர் ஒரு பூனையை நைசாகப் பிடித்து, எவ்விதச் சலனமுமின்றி உயரமான மாடியில் இருந்து கீழே வீசுகிறார். இந்த ‘ஷாக்’ வீடியோ தற்போது ‘வைரல்’ ஆகி வருவதோடு, இணையவாசிகள் மத்தியில் கடும் கண்டன அலைகளை உருவாக்கி உள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, விலங்கு நல ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. “கல்வி கற்க வேண்டிய இடத்தில் மனிதாபிமானமற்ற இத்தகைய செயல்கள் அரங்கேறுவது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்து உள்ளனர்.
வாய் பேச முடியாத ஒரு ஜீவனைத் துன்புறுத்திய அந்த மாணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

