வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே விநியோகத்திற்கான கையிருப்பு உள்ளதாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகஸ்தர்கள் சங்க தேசிய தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் கடந்த சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 750 டன் எரிவாயு தேவை இருப்பதாகவும் ஆனால் தற்போதைய தட்டுப்பாடு காரணமாக மிகப் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளதாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் சங்க தேசிய தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர் ,ஒரு மாதத்திற்கு சராசரி 22,000 டன் எரிவாயு தேவை இருப்பதாகவும் இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உபயோகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய கையிருப்பு அடிப்படையில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டும் இதனை சமாளிக்க இயலும் அதன் பிறகு விநியோகத்திற்கு சிலிண்டர்கள் இல்லை என்றும் கூறியதுடன், மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு வழிவகை செய்தது மகிழ்ச்சி தான் ஆனால் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களை நம்பி தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரி விடுதிகள், உணவு விடுதிகள் போன்றவை செயல்பட்டு வரும் நிலையில் அவற்றை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச விநியோகத்திற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

