கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியில், ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாகக் கிடைத்த ரகசியத் தகவலால் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, ரவுடி பாலமுருகன் என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரைத் தாக்கினார்.
இந்தத் தாக்குதலில் உதவி ஆய்வாளர் யுவராஜின் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. சக அதிகாரி வெட்டப்படுவதைக் கண்ட சூலூர் ஆய்வாளர் பிரேமானந்த், உடனடியாகத் தனது துப்பாக்கியால் ரவுடி பாலமுருகனின் வலது காலில் சுட்டுப் பிடித்தார்.
படுகாயமடைந்த பாலமுருகன் மற்றும் அவரது கூட்டாளி ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் ஏற்கனவே கல்லூரி மாணவர்களை வெட்டிய வழக்கிலும், பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டிய வழக்கிலும் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் என்பது அம்பலமாகியுள்ளது.
“தற்போது காயமடைந்த ரவுடி பாலமுருகன் மற்றும் எஸ்.ஐ யுவராஜ் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டப்பகலில் போலீசாரையே தாக்கிய ரவுடியைச் சுட்டுப் பிடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

