தஞ்சையில் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் விஜய் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், மாநில அரசால் நடைமுறைப்படுத்த முடியாது என்பது தெரிந்திருந்தும் ‘நீட் விலக்கு’ குறித்து ஏன் வாக்குறுதி வழங்கப்பட்டது என விஜய் எழுப்பிய கேள்வி பொருத்தமானது என்றார். அதேபோல் பெண்களுக்கு 100 ரூபாய் சிலிண்டர் மானியம், கரும்பு கொள்முதல் விலை உயர்வு போன்ற அறிவிப்புகள் குறித்து விஜய் முன்வைத்த கேள்விகளும் கவனிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டார்.
மேலும், ‘டெல்லி அணி – சென்னை அணி’ என்று விஜய் நகைச்சுவையாக கூறிய கருத்தை அரசியல் கோணத்தில் பார்க்காமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
அதே நேரத்தில், விஜய்யின் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து அவர் அக்கறை காட்டியதையும் பாராட்டிய தமிழிசை, வெயிலில் தொண்டர்கள் அவதிப்படாமல் இருக்க மேடைக்கு மேற்கூரை அமைக்கப்பட்டதற்கு தனது வரவேற்பையும் தெரிவித்தார்.

இதனுடன், கட்சித் தலைவரின் வாகனத்தை பின்தொடர்ந்து அதிவேகமாக செல்லும் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் விஜய்க்கு அவர் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டை ஆள விரும்பும் தலைவராக இருப்பதால், தனது கட்சியினருக்கு கட்டுப்பாட்டை உருவாக்கி ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகம் உண்மையான முன்னேற்றத்தை அடைய வேண்டுமெனில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது அவசியம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.

