கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த மூன்று பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
3 பேரும் ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களை தாக்கிவிட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அச்சம்பத்தில் தொடர்புடைய சதீஷ், அவரது சகோதரர் காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய 3 பேரை துடியலூர் அருகே சுட்டுப்பிடித்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி அவரது ஆண் நண்பர், உறவினர்கள் விசாரணை அதிகாரிகள் என 113 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது இறுதி கட்ட வாதமும் இரு தரப்பிடம் முடிந்து உள்ள நிலையில் கைதான சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களது வாதமும் கேட்டறியப்பட்டத்தை தொடர்ந்து மார்ச் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

