போதை மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், புலியகுளம் பகுதியின் பெயரை “சாராயக்குளம்” என்றும், இராமநாதபுரம் பகுதியின் பெயரை “சாராயபுரம்” என்றும் மாற்றி அமைக்க வேண்டும் என நாம் தமிழர் தெற்கு தொகுதி வேட்பாளர் பேரறிவாளன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் மனு அளித்தார். அம்மனுவில், கோவை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் அதிகளவில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருவதாகவும்,
இந்த பகுதிகளில் அதிகமான மதுக்கடைகள் இருப்பதால், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மதுபானப் பழக்கம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், மதுவால் குடும்பங்களில் பிரச்சினைகள், உடல்நல பாதிப்புகள் மற்றும் சமூக சீர்கேடுகள் உருவாகும் அபாயம் நிலவுகிறது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனை முன்னிட்டு, புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் அரசு சார்பில் போதை மறுவாழ்வு மையங்களை உடனடியாக அமைத்து, மதுவிலக்கு மற்றும் போதை விடுப்பு குறித்து விரிவான விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பாக, மதுப்பிரியர்களை நேரடியாக அணுகி அவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் திட்டங்கள் அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், போதை மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், புலியகுளம் பகுதியின் பெயரை “சாராயக்குளம்” என்றும், இராமநாதபுரம் பகுதியின் பெயரை “சாராயபுரம்” என்றும் மாற்றி அமைக்க வேண்டும் நூதன முறையில் மனு அளித்துள்ளனர்.

