நேற்று இரவு குவஹாத்தி மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டி, ரசிகர்களுக்கு ஒரு ‘ஃபுல் மீல்ஸ்’ விருந்தாக அமைந்தது. மழையினால் ஓவர்கள் குறைக்கப்பட்டாலும், அதிரடியில் எந்தக் குறையும் வைக்கவில்லை ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்
ஜெய்ஸ்வால் ஆட்டம்: 32 பந்துகள்.. 77 ரன்கள்!
ஆட்டம் தொடங்கிய முதலே மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ஐபிஎல் 2026: ‘தலை’ வருவாரா? தத்தளிக்கும் சிஎஸ்கே-வை மீட்கப்போவது யார்?
வெறும் 32 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால், 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 240-க்கும் மேலான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய விதம், மைதானத்தில் இருந்த மும்பை ரசிகர்களையே மெய்மறக்கச் செய்தது. 11 ஓவர்களில் ராஜஸ்தான் 150 ரன்களை எட்ட இவரே முக்கியக் காரணம்.
வைபவ் சூர்யவன்ஷி: பும்ராவையே மிரட்டிய 15 வயது சிங்கம்!
நேற்றைய போட்டியின் மிகப்பெரிய ‘சர்ப்ரைஸ்’ என்றால் அது இளம் வீரர் வைபவ் தான். உலகின் சிறந்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சில் அச்சமின்றி இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார்.
14 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த வைபவ், பும்ராவின் ஓவரை ஒரு சாதாரண பந்துவீச்சாளர் ஓவர் போல மாற்றிக் காட்டினார். 15 வயதில் இவ்வளவு துணிச்சலான ஆட்டத்தை ஐபிஎல் சரித்திரம் இதற்கு முன் கண்டதில்லை! மும்பையின் தோல்வி – ராஜஸ்தானின் ஹாட்ரிக் வெற்றி!
151 ரன்கள் என்ற இமாலய இலக்கை அதுவும் 11 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியால், ராஜஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.
சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கையூட்டினாலும், ரவி பிஷ்னோய் மற்றும் நந்த்ரே பர்கர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையின் முதுகெலும்பை உடைத்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்த சீசனில் தனது 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.
ராஜஸ்தான் முதலிடம்!
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 புள்ளிகளுடன் (Net Run Rate: +2.403) முதலிடத்தில் வலுவாக அமர்ந்துள்ளது. மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் தவித்து வருகின்றன.
இன்றைய போட்டி: இன்று இரவு 7:30 மணிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி தனது முதல் வெற்றியைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

