பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ஆக்ஷன், உணர்ச்சி, தேசப்பற்று ஆகியவை கலந்த இந்த படம், வடஇந்தியாவைத் தாண்டி தென்னிந்திய ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த வெற்றியின் மத்தியில், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து அளித்த பாராட்டு ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்து தனது எக்ஸ் (Twitter) தளத்தில் கருத்து தெரிவித்த அவர்,
“என்ன ஒரு படம்… துரந்தர் 2!!! இயக்குநர் ஆதித்யா தர் உண்மையிலேயே பாக்ஸ் ஆபிஸின் பாஸ்! ரன்வீர் சிங் மற்றும் முழு குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டார்.
இந்த பாராட்டுக்கு பதிலளித்த இயக்குநர் ஆதித்யா தர், ரஜினிகாந்தின் வார்த்தைகள் தன்னுக்கு மிகப்பெரிய ஊக்கமாக உள்ளதாக தெரிவித்தார்.
இது மட்டும் அல்லாமல், தென்னிந்திய திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். அதில் எஸ்.எஸ். ராஜமௌலி, அல்லு அர்ஜுன், நாகார்ஜுனா, வெங்கடேஷ் தக்குபாடி, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் அடங்குவர். இவர்களின் பாராட்டுகள், படத்தின் தேசிய அளவிலான செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது.

வசூல் விவரங்களைப் பார்த்தால், ‘துரந்தர் 2’ திரைப்படம் தினந்தோறும் புதிய மைல்கற்களை எட்டிக்கொண்டு வருகிறது. வெளியீட்டுக்குப் பிறகு முதல் திங்கட்கிழமையிலேயே சுமார் 65 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் மொத்த வசூல் 519.12 கோடி ரூபாயை எட்டியுள்ளதுடன், உலகளவில் 829.76 கோடி ரூபாய் வசூலித்து அதிரடி சாதனை படைத்துள்ளது.
மேலும், படம் மார்ச் 19ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானாலும், அதற்கு முன்பான மார்ச் 18ஆம் தேதி நடைபெற்ற ப்ரீவ்யூ காட்சிகள் கூட வரலாறு படைத்தன. நாடு முழுவதும் சுமார் 12,735 காட்சிகளில் திரையிடப்பட்ட இந்த ப்ரீவ்யூ மூலம் மட்டும் 43 கோடி ரூபாய் வசூலித்து, இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கட்டண ப்ரீவ்யூ சாதனையை உருவாக்கியுள்ளது.

