சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருவார் சரத்குமார். இவர் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தனது கட்சியை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் தோல்வியை தழுவினார்.
கட்சியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் சரத்குமாருக்கு தற்போது வரை பொறுப்பு வழங்காமல் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
இது குறித்து கட்சியினரிடம் ஆலோசனை நடத்திய சரத்குமார் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், பேசிய அவர் பாஜகவில் எனக்கு எந்த பொறுப்பும் தற்போது வரை வழங்கப்படவில்லை. பொறுப்பு இருந்தால், தான் கட்சியில் செயல்பட முடியும். ஒரு உறுப்பினராக என்னால், செயல்பட முடியாது.

பாஜக கொடுத்த வாக்கை நிறைவேற்ற வில்லை. நம் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய நீரோட்டத்தில் இணைந்தேன். அண்ணாமலை, நாயனார் நாகேந்திரனிடம் நாம் பலமுறை இது குறித்து பேசி இருக்கிறோம். அவர்களுக்கு ஏதோ தடங்கல் இருக்கிறது.
ஆனால், இதற்கு மேல் தாமதப்படுத்தினால் நன்றாக இருக்காது. உங்களின் அருமையும் பெருமையும் அறிவும் ஆற்றலும் தெரியவந்த பிறகு கட்சி பொறுப்பு வழங்காதது ஏன் என ஆதரவாளர்கள் என்னிடமே கேட்கிறார்கள்.
திருச்சி பொதுக்கூட்டம் மேடையில் உங்கள் புகைப்படம் கூட இல்லை என ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். எனக்கும் அந்த விஷயத்தில் ஆதங்கம் அதிகமாகவே உள்ளது.

நம்முடைய கோரிக்கையை பாஜகவுக்கு தெரியப்படுத்துவோம். அதன் பிறகு, முடிவெடுப்போம். அதிமுகவை பாஜக நிலைப்பாடு குறித்து எனக்கு தெரியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நானும் என் மனைவியும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தலைமை சொன்னால் கூட நிற்க மாட்டோம். என்னுடன் பயணித்தவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற பட்டியலை கொடுத்துள்ளேன். தவெக கட்சி பற்றி எந்த மதிப்பீடும் எனக்கு இல்லை. விஜய் ஒரு தலைவனே கிடையாது. 41 பேரை வீட்டிற்கு அழைத்து நீங்கள் துக்கம் விசாரித்து இருக்கக்கூடாது என பேசியுள்ளார்.

