திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியில், காணாமல் போன இளைஞர் சடலம் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என எதிர்க்கட்சிகள் கடும் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு சொந்தமான குவாரியில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, காணாமல் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்ற இளைஞர் உடல், அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், பத்து அடி ஆழத்தில் இருந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் அளிக்கிறது.
ஏற்கனவே சில நாட்கள் முன்பு, இளைஞர் கருப்பசாமியைத் தேடி, இந்தக் குவாரியில் விசாரித்தபோது, அவர் அங்கு வரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.

இந்தக் குவாரி, ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குத் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் பழனியாண்டி, ஊடகவியலாளர்களையே கடத்தி தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியிருந்தது. ஆனால், திமுக எம்எல்ஏ என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது, ஒரு இளைஞர் உயிர் பறிபோயிருக்கிறது. இது விபத்தா அல்லது கொலையா என்பது குறித்த முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். எனவே, இந்த குவாரி நிர்வாகம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் தொடர்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

