கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் சார்பில் பரிசுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், பறக்கும் படை அதிகாரி அகிலாண்டேஸ்வரி தலைமையிலான குழுவினர் இருகூர் செல்வ விநாயகர் கோவில் அருகே உள்ள ஜின்னிங் ஃபேக்டரி குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கலாமணி (கணவர் பழனிச்சாமி) என்பவருக்குச் சொந்தமான அந்த குடோனில் நடத்திய சோதனையின்போது, சுமார் 800-க்கும் மேற்பட்ட சில்வர் அண்டாக்கள் மற்றும் பல்வேறு சில்வர் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இந்தப் பாத்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. திமுக மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் அவர்களின் உத்தரவின் பேரில், இருகூர் பேரூராட்சித் தலைவர் சந்திரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைப்பற்றப்பட்ட இந்த பாத்திரங்களின் மொத்த மதிப்பு சுமார் 40,000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த அந்தப் பாத்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அந்த குடோனுக்கும் அதிரடியாக சீல் வைத்தனர்.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் திமுகவினர் பதுக்கி வைத்திருந்த பொருட்கள் சிக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

