கோவை மாவட்டம் தடாகம் அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழை மரங்களைச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைக் கடுமையாகச் சேதப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, வரப்பாளையம் பகுதியில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம், அங்கிருந்த விவசாய நிலங்களுக்குள் புகுந்து நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களைச் சாய்த்துச் சேதப்படுத்தியுள்ளன. காட்டுப்பன்றிகள் கூட்டமாகச் சுற்றித் திரிந்து பயிர்களைச் சேதப்படுத்தும் இந்தக் காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
விவசாய நிலங்கள் மட்டுமின்றி ஊருக்குள்ளும் பன்றிகள் உலா வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விளைநிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

