கோவை, நாகம்மநாயக்கன்பாளையத்தில் கள்ளக் காதல் விவகாரத்தில் திலீபன் என்ற ஹோட்டல் அதிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் காவல் துறையிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறும் போது:
அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணம் நடந்து உள்ளது. இதில் அவரது முதல் மனைவி இறந்து விட்டார். அவர் இறந்த பின்பு இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்ததாகவும், ஆனால் அவர் அவரிடம் விவாகரத்து பெற்று சென்று விட்டதாகவும், அதன் பின்னர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும், ஆனால் அவரும் சில மாதங்களிலே வேறொரு நபருடன் ஓடி விட்டதாக தெரிவித்தார்.
இதனால் தனியாக வசித்து வந்ததாகவும், அப்பொழுது அவரது வீட்டின் அருகே இருந்த 37 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்ததாகவும், அவரை நான்காவதாக திருமணம் செய்ய நினைத்து உள்ளார்.
ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் அந்த பகுதியில் உள்ள திலீபன் ஹோட்டலில் வேலை செய்தார். இது அவருக்கு பிடிக்கவில்லை, அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.
ஆனால் அவர் அதனை கேட்கவில்லை, தொடர்ந்து வேலைக்கு சென்று வந்து உள்ளார். அத்துடன் ஹோட்டல் உரிமையாளரான திலீப்பனுடன் அந்தப் பெண் கள்ளக் காதல் வைத்து இருந்ததும் அவருக்கு தெரியவந்தது. அவரை விட்டு, விட்டு அவருடன் சென்றது அவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
இதனால் கடந்த ஜனவரி மாதம் 4 ம் தேதி அவர் அந்தப் பெண்ணை கொலை செய்வதற்காக, அவர் வேலை பார்த்து வரும் ஹோட்டலுக்குச் சென்றதாகவும், அப்பொழுது அவரிடம் தகராறு ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியதாகவும், அதனால் அதனை தடுக்க முயன்ற திலீப்பனையும் கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்தார்.இதனால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
17 நாட்கள் சிறையில் இருந்து விட்டு சில நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்ததாகவும், வெளியில் வந்த பின்னரும் ஹோட்டல் அருகே இருப்பவர்களிடம் அந்தப் பெண் குறித்தும், திலீபன் குறித்தும் விசாரித்ததாகவும், அப்போது அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக ஊர் சுற்றுவது தெரிய வந்ததாகவும், தான் நான்காவது திருமணம் செய்ய இருந்த பெண்ணை திலீபன் அபகரித்து விட்டதாகவும், இதற்காக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி விட்டு நேற்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்று கதவை தட்டியதாகவும், அந்த பெண்ணும் கதவை திறந்து வெளியே வந்த போது அப்பொழுது வீட்டிற்கு திலீபனும் கட்டிலில் படுத்து இருந்து உள்ளார்.
இது லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்துக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அங்கு இருந்த கத்தியை எடுத்து கட்டிலில் படுத்து இருந்த திலீப்பனை சரமாரியாக குத்தியதாகவும், மேலும் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் கூறியவர், இதனால் அவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தார்.
அந்தப் பெண் அதனை தடுக்க முயன்றதால், அவரையும் கத்தியால் குத்தியதாகவும், இதில் அவரும் பலத்த காயம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைத்து அந்தப் பெண்ணுடன் ஒன்றாக சாகலாம் என முடிவு செய்து, அதற்காக வீட்டில் சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து வந்து கேஸ் திறந்து விட்டு தீயை பற்ற வைத்தது தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் தீ எரிவதை பார்த்து அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால், காவல் துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும், லாரி உரிமையாளர் பிரேம் ஆனந்த் வாக்கமூலத்தில் தெரிவித்து உள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

