அறிவியல் புனைகதை திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்த பல விஷயங்கள் இன்று நிஜமாகிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில், சாதாரண கரப்பான் பூச்சிகளை ராணுவ உளவுப் பணிகளுக்காக ‘சைப்ராக்’ (Cyborg) ரோபோக்களாக மாற்றும் அதிர்ச்சியூட்டும் தொழில்நுட்பத்தை ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Table of Contents

SWARM Biotactics எனப்படும் இந்த நிறுவனம், மடகாஸ்கர் கரப்பான் பூச்சிகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய பயோ-ரோபோக்களாக (Biorobots) மாற்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது எப்படிச் செயல்படுகிறது?
இந்த கரப்பான் பூச்சிகளின் முதுகில் சுமார் 15 கிராம் எடையுள்ள ஒரு சிறிய ‘பேக்பேக்’ (Backpack) பொருத்தப்படுகிறது. இதில் சென்சார்கள், மிகச் சிறிய கேமராக்கள் மற்றும் மினியேச்சர் AI (செயற்கை நுண்ணறிவு) அமைப்புகள் உள்ளன.
பூச்சியின் உணர்கொம்புகளில் (Antennae) எலக்ட்ரோடுகள் இணைக்கப்பட்டு, அவற்றின் மூலம் மூளைக்குச் செல்லும் சிறிய மின் அதிர்வுகள் (Electrical impulses) வாயிலாக இந்த கரப்பான் பூச்சிகளின் நகர்வுகளை மனிதர்களால் துல்லியமாக ரிமோட் மூலம் கட்டுப்படுத்த முடியும். மேலும், தன்னாட்சி அல்காரிதம்கள் (Autonomous algorithms) மூலம் பல கரப்பான் பூச்சிகளை ஒரே நேரத்தில் ஒரு கூட்டமாகச் (Swarm) செயல்பட வைக்கவும் முடியும்.

ராணுவ உளவுப் பணிகளுக்காக உருவாக்கம்
இந்த கரப்பான் பூச்சிகள் நகர்ப்புறங்களில் எவர் கண்ணிலும் படாமல், மிக எளிதாக ஊடுருவி ரகசியங்களை உளவு பார்க்க முடியும். ட்ரோன்களை இயக்குவதற்கான தகவல் தொடர்பு ரிலேக்களாகவும் (Communication relays) இவை செயல்படும்.
ஏற்கனவே ரஷ்யா ரேடியோ கட்டுப்பாட்டில் இயங்கும் புறாவையும், அமெரிக்கா நீர்மூழ்கி ட்ரோன்களாக ஜெல்லிமீன்களையும் மாற்றுவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால், முந்தைய திட்டங்களைப் போலல்லாமல், SWARM Biotactics நிறுவனம் தங்களின் இந்தத் தொழில்நுட்பத்தை வெளிப்படையாகவே ‘ராணுவப் பயன்பாட்டிற்கானது’ என அறிவித்துள்ளது. ஜெர்மன் ராணுவம் உட்பட பல நேட்டோ (NATO) நாடுகள் ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பத்தை வாங்கத் தொடங்கியுள்ளன.
உயிர்களைக் காக்குமா?
இது வெறும் அழிவு அல்லது உளவுக்கான கருவி மட்டுமல்ல, இதன் மூலம் பல உயிர்களைக் காக்கவும் முடியும் என டெவலப்பர்கள் கூறுகின்றனர். நிலநடுக்கம் அல்லது கட்டடச் சரிவுகளின் போது இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் கண்டுபிடிக்க இது பெரிதும் உதவும்.

மனிதர்கள் நுழைய முடியாத அபாயகரமான கன்னிவெடிகள் (Minefields) உள்ள பகுதிகளைப் பாதுகாப்பாகக் கண்டறியப் பயன்படுத்தலாம். பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இந்தச் சிறிய பயோ-ரோபோக்கள் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
அடுத்தகட்டம் என்ன?
SWARM Biotactics நிறுவனத்தின் CEO ஸ்டீபன் வில்ஹெல்ம் (Stefan Wilhelm), இந்தத் தொழில்நுட்பம் அடுத்த 1.5 முதல் 2 ஆண்டுகளில் பெருமளவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.
விலங்குகளைப் பயன்படுத்தி உளவு பார்ப்பது நெறிமுறை மீறல் என ஒரு தரப்பினரும், இந்தத் தொழில்நுட்பம் தீவிரவாதிகள் கையில் சிக்கினால் பெரிய ஆபத்து என மற்றொரு தரப்பினரும் எச்சரிக்கின்றனர். அதே சமயம், மீட்புப் பணிகளுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

