தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: 8.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 வகுப்பில் 7,465 மாணவர்கள் ‘ஸ்கிரைப் உதவியுடன் தேர்வெழுதவுள்ளனர். பொதுத் தேர்வெழுத 281 சிறைவாசிகள் பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 2) முதல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்வை 27,783 தனித் தேர்வர்கள் உள்பட 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதவுள்ளனர்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள் 7 லட்சத்து 99,692 பேர், தனித் தேர்வர்கள் 27,783 பேர் என மொத்தம் 8 லட்சத்து 27,475 பேர் எழுதவுள்ளனர்.
பிளஸ் 2 வகுப்பில் 7,465 மாணவர்கள் ‘ஸ்கிரைப் உதவியுடன் தேர்வெழுதவுள்ளனர். பொதுத் தேர்வெழுத 281 சிறைவாசிகள் பதிவு செய்துள்ளனர். இதற்காக 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் தினமும் 49,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
பொதுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க சுமார் 4, 900-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.முன்னதாக, பொதுத் தேர்வு நேரங்களில் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும், வகுப்பறையில் எத்தனை மாணவர்களை அமர வைக்க வேண்டும், வகுப்பறையில் குடிநீர், பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக உள்ளதா என்பது குறித்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், தேர்வறைக் கண்காணிப்பாளர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.நிகழாண்டு மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, பெரிய எழுத்துக்களில் ஏ4″அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (லாகரிதம்) 20,000 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளது.
இவ்வாண்டுமுதல் கணக்குப் பதிவியல் பாடத்துக்கு தேர்வர்கள் நிரலாக்க வசதியற்ற சாதாரண கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இருக்கை வசதி, சொல்வதை எழுதுபவர் நியமனம் (ஸ்கிரைப்), கூடுதல் நேரச் சலுகை வழங்குதல் போன்றவற்றில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 பொதுத் தேர்வின் முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன. முன்னதாக, இந்த வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப். 9 முதல் பிப்.14 வரை நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

