முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது மகனுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
எப்பொழுது… ஓபிஎஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் அவர் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும்.. தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டமன்றத்தில் மிக மோசமாக நடத்தினார்கள் அந்த கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தாய் கழகம் இணைந்ததைப் போல ஒரு உணர்கிறேன் என்று சொன்னால் அது தமிழகத்தில் உள்ள யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால் திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால் இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றால் திமுகவின் பரிதாப நிலையை தான் எண்ண வேண்டி இருக்கிறது.
ஓபிஎஸ் அவர்களின் திமுகவின் சேர்க்கை திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

