தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கோவை வருகை தந்தார்.
கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள் வழங்கிய புத்தகங்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை முதல்வர் இன்முகத்துடன் பெற்றுக்கொண்டார்.
வரவேற்பு நிகழ்வின் போது, கூட்டத்திற்கு நடுவே முதல்வரைக் காண்பதற்காக ஒரு சிறு குழந்தை நின்று கொண்டிருந்ததைக் கவனித்த முதல்வர், உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தச் செய்து அந்த குழந்தைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து சாக்லேட் வழங்கினார்.
முதல்வரின் இந்த நெகிழ்ச்சியான செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ‘பெரியார் அறிவுலகம்’ மையத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கோவை போத்தனூரில் அமைந்துள்ள காந்தி மியூசியத்தை முதல்வர் முறைப்படி திறந்து வைத்து, அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.
மேலும், கோவை மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட திமுக பாக முகவர்கள் (BLA) ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். முதல்வரின் வருகையை முன்னிட்டு கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

