நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும், முதற்கடவுளான விநாயகரை வழிபட்டு தான் தொடங்குகிறோம். அனைத்து கோவில்களிலும் விநாயகர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார் ஆனால், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் விநாயகரை நின்ற கோளத்தில் தரிசிக்கலாம்.
முன்னதாக, பார்வதி தேவி குளிக்க செல்லும் பொழுது விநாயகரை காவலுக்கு நிற்க சொல்லிவிட்டு சென்றாராம். உட்கார்ந்தால் தூங்கிவிடுவார் என்று எண்ணி பார்வதி தேவி விநாயகரை நின்று கொண்டே இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட விநாயகரும் அந்த இடத்தில் நின்று கொண்டே காவல் காத்தாராம் அதனால், இந்த கோவிலில் விநாயகர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், கோவிலின் நுழைவு வாயிலில் அம்மனுக்கு இடது புறத்தில் இந்த விநாயகரை நாம் தரிசனம் செய்யலாம்.

இரண்டடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலை பக்தர்கள் கோவிலுக்கு சென்றவுடன் முதலில் இந்த விநாயகரை தான் வழிப்பட்டு செல்கிறார்கள். காரணம் இந்த விநாயகர் அவ்வளவு சக்தி படைத்தவராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை இந்த விநாயகரிடம் வைத்து செல்கிறார்கள். அவர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேற்றி வருவதாகவும், பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த விநாயகருக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி உட்பட முக்கிய விழாக்களின் போது சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் இந்த கோவிலில் அருள் பாலிக்கிறார். விநாயகரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவருக்கு உகந்த அருகம்புல் மாலை, வெள்ளெருக்கு மாலை உள்ளிட்ட பலவித பூக்களை அணிவித்து வழிபட்டு செல்வது வழக்கம்.

