வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சில முக்கிய வாக்குறுதிகளை அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது, தவெக ஆட்சி அமைந்ததும், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதே தமது முதல் பணி என கூறினார்.
சட்டம்–ஒழுங்கு மிகக் கடுமையாக அமல்படுத்தப்படும். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தரமான கல்வியை வழங்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
போட்டித் தேர்வுகளுக்காக அதிக செலவில் தனியார் பயிற்சி மையங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது; அரசுப் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களே போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைக்கப்படும்.
உயர்நிலை வகுப்புகளிலேயே அடிப்படை அரசியல் மற்றும் அரசியல் சாசனச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடுகள், அவற்றை அணுகும் நடைமுறை போன்றவை மாணவர்களுக்கு செய்முறைப் பாடமாக கற்பிக்கப்படும்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்காக சுத்தமான, பாதுகாப்பான மற்றும் கதவுகள் பொருத்தப்பட்ட கழிப்பறைகள் கட்டாயமாக அமைக்கப்படும். போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பதவிகளில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும். மலைப்பகுதி கிராமங்களில் பிரசவ வசதியுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும். பஸ் வசதி இல்லாத கிராமமே இல்லாத நிலை உருவாக்கப்படும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல அமைப்புகள் வலுப்படுத்தப்படுவதுடன், ஆட்டோ, டாக்சி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கென தனிப்பட்ட நல வாரியம் உருவாக்கப்படும்.
தென்தமிழகம் உட்பட தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து தொழில் வளம் விரிவுபடுத்தப்படும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு காலத்திற்கேற்ற திட்டங்கள் வடிவமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

