கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் திமுக எம்பி கணபதி ராஜ் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் -43 க்குட்பட்ட கமலநாதன் பள்ளியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ. 34.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள யோகா மையத்தினை திறந்து வைத்தும், மற்றும் ரூ. 82.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ARVR ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், வார்டு எண் -38 க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் 15வது நிதிக்குழு நிதியின் கீழ் ரூ. 75.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்படவுள்ள நகர்நல மைய கட்டுமான பணியினை துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநில நிதிக்கழக (SFC-state financial corporation ) திட்டத்தின் கீழ் ரூ. 68.00 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தும், வார்டு எண் -74 க்குட்பட்ட குமாரசாமி குளத்தில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ. 60.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள (Multi-sports) பன்முக விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைத்தனர்.

வார்டு எண் -33 க்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாநகராட்சியின் சார்பில் ரூ. 9.90 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.10 ஏக்கர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான (paraolympic) விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலக தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல்விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என திரளான பொதுமக்கள் உடன் இருந்தனர்.

