சட்டக்கல்லூரியில் வகுப்புக்குள் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு சட்டக் கல்லூரியில் இன்று காலை அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. ஏராளமான மாணவர்கள் பயிலும் அந்தக் கல்லூரியில், காலை 9.15 மணியளவில் வகுப்பறையில் இருந்த பிரின்ஸ் ராஜ் என்ற மாணவர், திடீரென எழுந்து துப்பாக்கியை எடுத்து, பின்னால் அமர்ந்திருந்த சக மாணவி சந்தீப் கவுர் மீது சுட்டார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் வகுப்பறையில் இருந்த மாணவிகள் அலறியடித்து வெளியே ஓடினர். இதன் பின்னர், பிரின்ஸ் ராஜ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை முடித்துக் கொண்டார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
