அரசு விழாவிலும் அரசியல் பேசி புலம்பிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அண்மையில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உண்மைக்கு புறம்பாக பேசிவிட்டுச் சென்றுள்ளார். அவர் அமித் ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளுக்கு முடிவுகட்டும் வகையில் திமுக செயல்படுகிறது எனப் பேசியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சுமார் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம்” பேசியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் அராஜகத்தில் திமுக அரசு ஈடுபட்டது. இதை விடவா, திமுக அரசின் இந்து விரோதப் போக்கிற்கு உதாரணம் வேண்டும்?
இந்து கோயில்களின் கும்பாபிஷேகத்திற்கு திமுகவோ, திமுக அரசோ நிதி தரவில்லை. முழுக்க முழுக்க இந்து பக்தர்களின் நன்கொடை, காணிக்கையால் மட்டுமே கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்து கோயில் கும்பாபிஷேகம் நடத்த திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைதான் உள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் புதிய உற்சவர் சிலைகள் செய்ய பக்தர்களிடம், 312 சவரன் தங்கம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டதும், புதிதாக தயாரித்த உற்சவர் சிலைகளில், துளி கூட தங்கம் இல்லை என்று சென்னை ஐஐடி ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்து. இப்படி கோயில் பணம் கொள்ளை போகிறது. இதைதான் அமித்ஷா அவர்கள் அம்பலப்படுத்தினார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை கக்குவது திமுகவினர்தான்.இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மனமில்லாத அளவுக்கு வெறுப்புணர்வு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மதசார்பின்மை பற்றி பேசுவது கேலிக்கூத்து.

அமித்ஷா வருகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிகவும் பாதித்துள்ளது என்று நினைக்கிறேன். இதற்கே இப்படி என்றால் அடுத்த முறை அமித்ஷா தமிழ்நாடு வரும்போது அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அப்படி அமையும் கூட்டணி வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவிலும் அரசியல் பேசி புலம்பிக் கொண்டிருக்கிறார். இனிவரும் நாட்களில் திமுகவின் கதறல் அதிகமாக இருக்கும்.

