ஆண்களுக்கு பெண் நிகர் என்பது இன்றைய அறிவியல் காலத்தில் சாத்தியமாகி வருகிறது. ஒரு பக்கம் ஆண்கள் கோலோச்சிய பல்வேறு துறைகளில் பெண்கள் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர்.அதே சமயம் ஆண், பெண் இருபாலினருக்கும் சளைக்காமல் போட்டி போட்டு வருகின்றனர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக இருப்பவர் கோவையை சேர்ந்த பத்மினி பிரகாஷ். வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை தாண்டி பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து தன்னுடன் படித்தவரை தனது வாழ்க்கை துணையாக தேடிக் கொண்டவர் பத்மினி பிரகாஷ்.
ஒட்டுமொத்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர் பத்மினி பிரகாஷ். இவருக்கு உறுதுணையாக இருந்தவர் இவர் கணவர் பிரகாஷ். கணவர், மகன் என அழகான குடும்பத்துடன் கோவையில் வசித்து வரும் பத்மினி, படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய கேரியரை வீணாக்காமல், தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக நுழைந்தார்.
இந்தியாவில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக வலம் வந்த அவர், தமிழ் துறையில் முதுகலையும் முடித்து, முனைவர் பட்டம் பெற்று, நெட் தேர்வையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருக்கு அரசு கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. இதனிடையே பேராசிரியர் ஆக முழுத் தகுதியுடைய அவர், தமிழ் துறையில் பேராசிரியர் பணிக்கான டிஆர்பி தேர்வையும் துணிச்சலுடன் எழுதியுள்ளார்.
திருநங்கைகள் செய்யாத சாதனையை இந்த பத்மினி பிரகாஷ் துணிச்சலாக, தைரியமாக சத்தமே இல்லாமல் வென்று காட்டி வருகிறார். முழுத்தகுதியுடன் தமிழ் துறையில் டிஆர்பி தேர்வு எழுதிய முதல் திருநங்கை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இன்று நடந்த டிஆர்பி தேர்வை எழுதியுள்ள அவர், தனக்கு அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்கிறார். அவரது கனவு நினைவாக நாமும் வாழ்த்துவோம்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால், இளைய சமுதாயத்தினரான மாணவர் சமுதாயத்தை பாலின சமத்துவம் மூலம் சமூக நீதியையும் உறுதிப்படுத்த முடியம. அதற்காகவே தமிழக அரசு திருநங்கைகளுக்கும் அரசு கல்லூரியில் பேராசிரியராகும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

