சாலையோரத்தில் யாசகம் பெற்று வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் யாசகர்கள் தங்கியிருந்த நிலையில் காலை எழுந்து பார்க்கும் போது அருகில் அடையாளம் தெரியாத பெண் சமலமாக கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர், கிராம நிர்வாக அலுவலரின் உதவியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் திருச்சி மாவட்டம் ஆவூரைச் சேர்ந்த நூர்ஜஹான் என்பதும், குடும்பத்தை பிரிந்து பொன்னமராவதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில், அதே யாசகர் குழுவில் உள்ள சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 61 வயது சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
சாமியாராக உள்ள சதீஷ்குமார், தனியாக உறங்கிக் கொண்டிருந்த நூர்ஜஹானிடம் உடலுறவுக்கு அழைத்தபோது அவர் மறுத்ததாகவும் அதனால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

