
கோவை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொகுப்பூதிய செவிலியர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக இரவு, பகலாக காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், தங்களது வேதனையை வெளிப்படுத்தும் வகையில், ‘கண்களும் கைகளும் கட்டப்பட்டு விட்டது’ என கூறி, கருப்பு துணிகளால் கண்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் காலத்தில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்தால், அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைத்து நீண்ட காலம் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நான்கு நாட்களாக இரவு, பகல் பாராமல் குளிர் மற்றும் பனியையும் பொருட்படுத்தாமல், குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செவிலியர்கள் தெரிவித்தனர். தினமும் உயிர்களை காக்கும் பணியில் ஈடுபடும் தங்களது வாழ்க்கை இன்று பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதற்கிடையே, அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 700 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அது போதுமானது அல்ல என்றும், பணியாற்றும் அனைத்து ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பதே தங்களது ஒரே கோரிக்கை என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அனைத்து கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படாததால், ஐந்தாவது நாளாக இன்று நடைபெறும் போராட்டத்தில், தங்களது குரல் கேட்கப்படாத நிலையை சூசகமாக வெளிப்படுத்தும் வகையில், கருப்பு துணிகளை கண்களிலும் கைகளிலும் கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு எப்போது தீர்வு வழங்கும் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
