சூலூர் அருகே சுடுகாட்டில் பெயிண்டர் ஒருவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரத். பெயின்டிங் வேலை செய்து வந்த இவர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும், இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பரத் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் காலை வரை வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் பரத்தைத் தேடி, வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, வாயில் ரத்தக்கறையுடன் அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரின் காலணிகள் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த மாலை உள்ளிட்டவையும் அருகே சிதறிக் கிடந்தன.

உடனடியாக இது குறித்து சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர், பரத் இறந்து கிடந்ததைப் பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
பின்னர், அவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பரத்தின் உறவினர்கள் பேசும்போது, “பரத் மர்மமான முறையில் இறந்து கிடப்பதால், யாரோ அவரை கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம். எனவே, காவல் துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பரத்தின் பின்னணி மற்றும் மரணம் குறித்த காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

